புதன், 23 ஜூன், 2010

தியானமும் யோகமும்! 016

---------- Forwarded message ----------
From: Nagarajan rajan <manonaga@gmail.com>
Date: 2010/6/24
Subject: கட்டுரை போட்டி
To: admin@sivastar.net
கட்டுரைப்போட்டி எண் 016

தியானமும் யோகமும்

தியானம், யோகம் பற்றி மக்களிடையே நிலவும் பரவலான கருத்து

நம்மில் பெரும்பாலானோர் தியானம் என்பது ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கைகளை நீட்டி கால்களை மடக்கி எதாவது ஒரு பொருளின் மீது மனதை குவித்து, ஏதோ ஒரு மந்திரத்தை ஜபிப்பது என்று நினைக்கிறார்கள். மேலும் யோகா என்றால் உடலை வளைத்து நெளித்து செய்யும் உடற்பயிற்சி என்றும், இதை செய்வதன் மூலம் குடும்பம் மற்றும் உயர் அதிகாரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும், சில நோய்நொடியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும், ஆயுள் அதிகரிக்கும் என்றும், நீரில் நடக்கவும், காற்றில் மிதக்கவும் மற்றும் சுகபோக வாழ்க்கை வாழவும் சக்தி கிடைக்கும் என்றும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து.

தியானம் மற்றும் யோகம் என்பதன் பொருள்

தியானம் என்றால் மனதை குவிப்பது என்பது உண்மை ஆனால் எதன் மீது அல்லது யார் மீது குவிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். யோகா என்ற சொல் யுஜ்(ஒன்றிணை) என்ற சொல்லிலிருந்து உருவானது, அதாவது ஒன்றிணைத்தல் என்று பொருள். எதை, எதனுடன் ஒன்றிணைப்பது என்பதை தெரிந்து கொள்ள வேன்டும்.

யோகாவின் அடிப்படை நோக்கம்

எந்த ஒரு செயல்முறைக்கும் ஒரு நோக்கம் உண்டு. அதன்படி யோகாவின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம். அதற்கு முன் சற்று அடிப்படை உண்மையை தெரிந்து கொள்வோம். 'நான்' என்ற சொல் எதை குறிக்கிறது? பொதுவாக, என் கை, என் கால், என் வாய், என் உடல் என்று சொல்லி கேள்விபட்டிருக்கிறோம். யாராவது நான் கை, நான் கால், நான் வாய், நான் உடல் என்று சொல்லி கேள்விப்பட்டதுண்டா? இல்லை. பிறகு இந்த 'நான்' என்ற சொல் யாரை குறிக்கிறது? யாரிடம் கேட்பது? எங்கே தேடுவது? என்று ஒரே குழப்பமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். நமக்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில்(ப.கீ) இதை பற்றி தெளிவாக சொல்லியுள்ளார்.

(ப.கீ_2.17)

அவினாஷி து தத் வித்தி யேன சர்வமிதம் ததம்

வினாஷம் அவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித் கர்துமர்ஹதி


பொருள்:

உடல் முழுவதும் வியாபித்துள்ள ஆன்மா அழிவற்றவன். ஆன்மாவை யாராலும் அழிக்க முடியாது.

(ப.கீ_2.20)

ந ஜாயதே ம்ரியதே வா கதாச்சின் நாயம் பூத்வா பாவித வா ந பூயஹ

அஜோ நித்யஹ ஷாஷ்வதோயம் புரானோ ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே




பொருள்:

ஆன்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ,இறப்போ இல்லை. அவன் ஒரு முறை இருந்து பிறகு இல்லாமல் போவதும் இல்லை. அவன் பிறப்பற்றவன், நித்யமானவன், என்றென்றும் இருக்கும் மிக பழமையானவன். அவன் உடல் அழியும் பொழுது அவன் அழிக்கப்படுவதில்லை.

(ப.கீ_2.22)

வாசம்சி ஜீர்னானி யதா விஹாய நவானி க்ருஹனாதி நரோபரானி

ததா ஷரீரானி விஹாய ஜிர்னானி அன்யானி சம்யாதி நவானி தேஹி


பொருள்:

ஒருவன் எப்படி பழைய உதவாத ஆடையை கழற்றிவிட்டு புதிய ஆடையை அணிகிறானோ அதேபோல் ஆன்மா உதவாத இறந்த உடலை விட்டு வேறு ஒரு புதிய உடலை ஏற்கிறான்.

(ப.கீ_2.23)

நைனம் சின்தன்தி ஷஸ்த்ரானி நைனம் தஹதி பாவகஹ‌

ந‌ சைனம் க்லேதயந்தி ஆபோ ந ஷோஸயதி மாருதஹ‌


பொருள்:

ஆன்மாவை எந்த ஒரு ஆயுதத்தாளும் துண்டாக்கவோ, நெருப்பால் எரிக்கவோ, நீரால் நனைக்கவோ, காற்றால் தூற்றவோ முடியாது.

மேலும் அவனை கரைக்கவோ, உலர்த்தவோ முடியாது. அவன் மாற்றமற்றவன், கண்ணுக்கு தென்படாதவன், கற்பனைக்கு அப்பாற்பட்டவன். இப்படி இன்னும் பல உண்மைகளை சொல்லி கொண்டே போகிறார். 'நான்' என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று இப்போது புரிகிறதா?. இப்படிபட்ட உன்னதமான ஆன்மா, மாய சக்தியால், தான் இந்த உடல் என்று நினைத்துக்கொண்டு, கட்டுப்படுத்தப்படாத மனதில் எழும் தகாத ஆசைகளை தன் புலனுறுப்புகள் மூலம் நிறைவேற்றிகொள்கிறான். இப்படி அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கு நல்ல அல்லது தீய கர்மங்களை சேர்க்கிறது. இந்த நல்ல அல்லது தீய கர்மங்களின் கணக்குப்படி அவனுடைய அடுத்த ஜென்மம் அல்லது அடுத்த உடல் நிர்ணயிக்கப்படுகிறது. அவனுடைய அடுத்த உடல் , ஒரு செல் பரமீசியம் முதல் தொடங்கி 84,00,000 சிற்றினங்களில் ஏதாவது ஒரு உடலாக இருக்கலாம். ஒருவேளை அவனுக்கு விலங்கு உடல் கொடுக்கப்பட்டால், அவன் மீண்டும் மனித உடல் பெறுவதற்கு‌ கணக்கிடமுடியாத ஜென்மங்கள் எடுக்க வேண்டி வரும். அதேபோல் இப்போது, நல்ல கர்மங்கள் (புண்ணியங்கள்) செய்து சொர்கலோகம் அல்லது மற்ற பிற லோகங்களுக்கு சென்றவர்களின் நிலை என்ன? என்பதை கீழுள்ள ஸ்லோகம் மூலம் பார்ப்போம்.

(ப.கீ_9.21)

தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஷாலம் ஷீனே புண்யே மர்த்ய லோகம் விஷந்தி

ஏவம் த்ரை தர்மம் அனுபிரபண்ணா கதாகதம் காம காமா லபந்தே


பொருள்:

தேவலோகங்களின் அதீத புலனின்பங்களை அனுபவித்து முடித்து, தங்கள் புண்ணிய செயல்களின் பலன்கள் தீர்ந்ததும், ஆன்மாக்கள் இந்த மண்ணுலகத்தை வந்தடைகின்றனர். இவ்வாறு வேத வழிமுறைகளை பின்பற்றுவதால் கிடைக்கும் புலனின்பங்களை தேடுபவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியிலேயே தொடர்ந்து சுழலுவர்.

என்னய்யா இது? பாவம் செய்தாலும், இந்த மண்ணுலக பிறப்பு இறப்பு சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கவேண்டிவரும் என்கிறீர்கள். புண்ணியம் செய்தாலும் இறுதியில் இதே சுழற்சிக்கு தான் வரவேண்டும் என்கிறீர்கள் பிறகு இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட என்னதான் வழி? என்று கேட்கிறீர்களா. இதற்கான விடையை கீழுள்ள ஸ்லோகத்தின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

(ப.கீ_ 8.8)

அப்யாச யோக யுக்தேன ச்சேதச நான்ய காமினா

பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தா அனுச்சின்தயன்.


பொருள்:

என்னை பரமபுருஷனாக எவனொருவன் தியானிக்கின்றானோ, அவன் மனம் பாதையிலிருந்து விலகாமல், தொடர்ந்து என்னை பற்றி நினைப்பதிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கும். ஓ பார்த்தா(அர்ஜுனா), அவன் நிச்சயம் என்னை அடைவான்.

(ப.கீ_8.15)

மாம் உபேத்ய புனர் ஜென்ம துக்காலயம் அஷாஷ்வதம்

நாப்னுவந்தி மஹாத்மானஹ சம்சித்திம் பரமாம் கதஹ‌


பொருள்:

பக்தியிலே யோகிகளான மகாத்மாக்கள் என்னை அடைந்த பின்னர், இந்த துன்பம் நிறைந்த தற்காலிகமான உலகிற்கு மீண்டும் வருவதில்லை, ஏனெனில் அவர்கள் உன்னத நிலையை அடைந்துவிட்டனர்.

(ப.கீ_8.16)

ஆ பிரம்ம புவனால் லோகஹ புனர் ஆவர்தினோ அர்ஜுனா

மாம் உபேத்ய து கெளந்தேய புனர் ஜென்ம ந‌ வித்யதே


பொருள்:

பிரம்ம லோகம் முதல் பாதாள லோகம் வரை அனைத்திலும் பிறப்பு இறப்பு சுழற்சி நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால் என்னுடைய இருப்பிடத்தை (வைகுண்ட லோகம்) அடைந்தவன் மீண்டும் பிறவி எடுப்பதில்லை, ஓ குந்தியின் மகனே!.

எனவே கிடைப்பதற்கு அரிதான இந்த மனித பிறவியை சரியாக பயன்படுத்தி, தான் இந்த உடல் அல்ல என்பதை உணர்ந்து, மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி, உடல் ரீதியான பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு, தன்னை (ஆன்மா) பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் ஒன்றிணைத்தலே யோகவின் அடிப்படை நோக்கமாகும்.



யோகமுறையின் வகைகள் மற்றும் அதை செய்யும் முறைகள்

யோகமுறைகளில் குறிப்பிட தக்கவை அஷ்டாங்க அல்லது தியான‌ யோகா, கர்ம யோகா மற்றும் பக்தி யோகமாகும்.

அஷ்டாங்க அல்லது தியான‌ யோகம்

அஷ்ட‍_ எட்டு; அங்க_ நிலைகள். எட்டு நிலைகள் கொண்ட யோகமுறை என்று பொருள். இந்த முறை பதஞ்சலி என்ற முனிவரால் உருவாக்கப்பட்டது. இதன் எட்டு நிலைகளான‌ யாம மற்றும் நியம நிலைகள் நன்நடத்தை பயிற்சிகள் பற்றியும், ஆசன நிலை உடற்பயிற்சி பற்றியும், பிராணயாம நிலை மூச்சை கட்டுப்படுத்தும் முறை பற்றியும், பிரத்யஹார நிலை புலனுறுப்புகளை கட்டுப்படுத்தும் முறை பற்றியும், தாரன நிலை மனதை நிலைபடுத்தும் முறை பற்றியும், தியான நிலை பரம்பொருளின் மீது மனதை குவிக்கும் முறை பற்றியும், கடைசி நிலையான சமாதி நிலை இதயத்தில் உள்ள பரமாத்மாவான விஷ்ணுவின் மீது ஆழ்ந்த சிந்தணையில் லயித்திருப்பதை பற்றியும் கற்றுதருகிறது.

இந்த தியான யோகத்தை செய்யும் முறை பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ப.கீ_6.(11_12)

ஷுச்செள தேஷே ப்ரதிஷ்டாப்ய ச்திரம் ஆசனம் ஆத்மனஹ

நாத்யுச்ரிதம் நாதினீச்சம் ச்சைலாஜின குஷோதரம்.

தத்ரைகாக்ரம் மனஹ க்ருத்வா யத ச்சித்தேந்திரிய க்ரியஹ‌

உபவிஷ்யாசனே யுஞ்யாத் யோகம் ஆத்ம விஷுத்தயே.


பொருள்:

இந்த யோக முறையை பயில ஒருவன் புணித தலத்திற்கு சென்று தனிமையான இடத்தில் தரையின் மீது குச என்கிற புல்லை நிரப்பி, உயரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாதபடி அதன் மீது மான் தோல் மற்றும் மிருதுவான துணியை வைத்து ஆசனம் அமைக்க வேண்டும். அந்த ஆசனத்தின் மீது யோகி உறுதியாக அமர்ந்து, மனதையும், புலன்களையும், செயல்களையும் கட்டுப்படுத்தி, மனதை ஓரிடத்தில் குவிப்பதன் மூலம் இதயத்தை தூய்மைபடுத்துவதற்கு அவன் யோகம் பயிலவேண்டும்.

ப.கீ_6.(13_14)

சமம் காய ஷிரோ க்ரிவம் தாரயன்னச்சலம் ஸ்திரஹ‌

சம்ப்ரேக்ஷ்ய நாசிகாக்ரம் ஸ்வம் திஷஷ் ச்சானவலோகயன்.

பிரஷாந்தாத்மா விகதபிர் பிரம்மச்சாரி வ்ரதே ஸ்திதஹ‌

மனஹ சம்யம்ய மச்சித்தோ யுக்த ஆசீத மத்பரஹ.


பொருள்:

ஒருவன் தன்னுடைய உடல், கழுத்து மற்றும் தலையை நேர்கோட்டில் நிறுத்தி, மூக்கின் நுனியை நிலையாக நோக்கவேண்டும். இவ்வாறு அசையாமல், ஆழ்ந்த மனதுடன், அச்சமின்றி, உடலுறவிலிருந்து முற்றிலும் விடுபட்டு, இதயத்தினுள் என்னை தியானித்து, என்னை அடைவதையே வாழ்வின் உயர்ந்த குறிக்கோளாக கொள்ளவேண்டும்.

(ப.கீ_6.15)

யுஞ்ஜன்னேவம் சதாத்மானம் யோகி நியத மானசஹ

ஷாந்திம் நிர்வான பரமம் மத் சம்ஸ்தாமதிகச்சதி.


பொருள்:

இவ்வாறு, ஒரு யோகி உடல், மனம், செயல் ஆகியவற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் முறையை பயில்வதன் மூலம் மனதை ஒழுங்குபடுத்தி என் இருப்பிடத்தை (ஸ்ரீ வைகுண்டம்) வந்தடைகிறான்.

என்ன, இந்த யோக முறை நடைமுறையில் முடியுமா? என்று யோசிக்கிறீர்களா! உண்மைதான் அர்ஜுனனுக்கே இந்த தியான யோக முறை, காற்றை கட்டுப்படுத்துவதை விடவும் கடினமான காரியமாகதான் ‌ தோன்றியது. எனவே அவர் வேறு ஒரு எளிய யோக முறையை கூறும் படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டிக்கொண்டார். அவருக்கே இந்த நிலை என்றால், கலியுக மக்களான நமக்கு இந்த யோகமுறை எப்படி சாத்தியம்? சரி, இப்போது அடுத்த யோகமுறையை பற்றி பார்ப்போம்.

கர்ம யோகம்

ஒருவன் தான் செய்யும் எந்த ஒரு செயலுக்கும், அதை தொடர்ந்து உண்டாகும் வினைகள் கர்மங்கள் எனப்படும். இயற்கை சத்வ, ரஜோ மற்றும் தாமஸம் என்ற முக்குணங்களால் ஆனது. அனைவரும் இம்மூன்று குணங்களில், தான் கொண்டுள்ள ஏதாவது ஒரு குணத்தினால் தொடர்ந்து ஏதாவது ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறோம். ஒரு நிமிடம் கூட எதாவது ஒரு செயலை செய்யாமல் இருக்க முடியாது.

என்ன கொடுமை இது? எதுவும் செய்யாமல் இருக்க முடியாது, அப்படி செய்தாலோ அந்த செயல் கர்மங்களை உண்டாகும். கர்மங்கள் நம்மை பிறப்பு இறப்பு சுழற்சியில் ஈடுபடுத்தும். இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி? என்று கேட்கிறீர்களா. கவலை வேண்டாம். கர்ம யோகத்தை பின்பற்றுவதன் மூலம், நாம் விரும்பும் செயல்களையும் செய்யலாம். அதே சமயம் அந்த செயல்களின் கர்மங்களிலிருந்தும் விடுபடலாம். இப்போது மகிழ்ச்சிதானே. இனி கர்மயோகம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

செய்யும் செயல்கள் அணைத்தையும் பகவான் ஸ்ரீ விஷ்ணுவை திருப்திபடுத்து-

வதற்காகவே செய்ய வேண்டும். இல்லையெனில் செய்யும் செயல் கர்மங்களை விளைவிக்கும். அணைத்து உயிர்களும் உணவு பயிர்களை சார்ந்து இருக்கிறது, உணவு பயிர்கள் மழையை சார்ந்து இருக்கிறது, மழை யாகங்களை சார்ந்து இருக்கிறது. யாகங்கள் புரிவது நாம் செய்ய‌ வேண்டிய கடமையாகும். மேலும் தனக்கு எதை எதை அர்பணிக்க வேண்டும் என்று கீழுள்ள ஸ்லோகத்தின் மூலம் தெரிவிக்கிறார்.

(ப.கீ_9.27)

யத் கரோஸி யத் அஷ்நாசி யஜ் ஜுஹோஸி ததாசி யத்

யத் தபஸ்யசி கெளந்தேய தத் குருஸ்வ மத் அர்பணம்


பொருள்:

எந்த ஒரு செயலை செய்தாலும், எந்த ஒரு உணவை உண்டாலும், எந்த ஒரு தானம் செய்தாலும் மற்றும் எந்த ஒரு தவம் (விரதம்)செய்தாலும் அதை எனக்கு அர்பணிப்பாயாக‌, ஓ குந்தியின் மகனே!.

மேலே சொல்லப்பட்ட "எந்த ஒரு உணவை உண்டாலும்" என்ற வாக்கியத்தை படித்துவிட்டு, நாளையிலிருந்து நானும், மாமிசம் மற்றும் மதுபானத்தை தினமும் பகவானுக்கு அர்பணித்த பின்னர் அதை பிரசதமாக உண்பேன், என்று குதற்கமாக எண்ணும் அறிவிலிகளும் உண்டு. இவர்களுக்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு எந்தெந்த உணவுப்பொருளை அர்பணிக்க வேண்டும் என்று கீழுள்ள ஸ்லோகத்தின் மூலம் தெரிவிக்கிறார்.

(ப.கீ_9.26)

பத்ரம் புஷ்பம் பழம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி

ததஹம் பக்தி உபஹ்ரதம் அஷ்னாமி ப்ரயதாத்மனா


பொருள்:

ஒருவன் தூய அன்பு மற்றும் பக்தியுடன் ஒரு இலையையோ, ஒரு பூவையோ, ஒரு கனியையோ அல்லது நீரையோ அர்பணித்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இதிலிருந்து, அவர் தாவர உணவை மட்டுமே ஏற்கிறார், மாமிச உணவை அல்ல என்பது தெளிவாகிறது. அப்படியென்றால் பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் உணவு பொருட்களை அவர் ஏற்பதில்லையா? என்று நினைக்கலாம். அது அப்படியில்லை, குழந்தைக்கு எப்படி தாய்பாலோ, அதேபோல்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பசும்பால். அதை தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு வெண்ணெய் திருடன் என்ற பட்டமும் மற்றும் கோபாலன் என்ற பெயரும் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். அவ்வளவு ஏன், அவர் படுத்திருப்பதே பாற்கடல் மீதுதான்.

(ப.கீ_3.19)

தஸ்மாத் அசக்தஹ சததம் கார்யம் கர்ம சமாச்சர

அசக்தோ ஹி ஆசரண் கர்ம பரம் ஆப்னோதி பூருஷஹ‌




பொருள்:

எனவே , ஒருவன் செயல்களின் பலன்கள் மீது பற்றில்லாமல், அதை தன் கடமையாக எண்ணி செயல்படவேண்டும், அவ்வாறு பற்றில்லாமல் செயலை செய்வதால் அவன் பரம்பொருளை அடைகிறான்.

செயல்களின் பலன்கள் மீது பற்றில்லாமல் கடமையாக எண்ணி அணைத்தையும் பகவானுக்காக அர்பணிப்பதே கர்ம யோகம் ஆகும். இந்த யோகமுறை அஷ்டாங்க‌ யோகமுறையை காட்டிலும் சற்று எளிதானது. இருப்பினும் வேதத்தில் குறிப்பிட்டுள்ள அணைத்து யாகங்களையும், கடமைகளையும் செய்வதற்கு ஒருவர் வேதத்தை தெளிவாக படித்திருக்க வேண்டும். வேதங்களை படிப்பதற்கே நமது இந்த பிறவி போதாது, அப்படிஇருக்க அதை பின்பற்றுவது எப்போது?. எனவே கர்ம யோகமும் சற்று கடினமே. இந்த இரண்டு யோகமுறையை காட்டிலும் மிகமிக எளிதான, அ னைவரும் கடைபிடிக்க தகுந்த மற்றும் கலியுக மக்களுக்கு உகந்த‌ பக்தி யோகமுறையை பற்றி இப்போது பார்ப்போம்.

பக்தி யோகம்

பக்தி தொண்டின் மூலம் பகவான் கிருஷ்ணரை அடைவது பற்றி இந்த யோகமுறை விளக்குகிறது. ஸ்ரீமத் பாகவதத்தில்(7.5.23) ஒன்பது விதமான பக்தி தொண்டின் மகிமை விளக்கப்பட்டுள்ளது.

ப்ரஹலாத உவாச்ச:

ஸ்ரவணம் கீர்தனம் விஷ்ணு ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யம் ஆத்ம நிவேதனம்

இதி பும்ஷர்பித விஷ்ணு பக்திஷ்சென்னேவ லக்ஷ்சனா

க்ரியேத பகவதியத்தா தன் மன்யே அதிதம் உத்தமம்.


பொருள்:

பக்த பிரஹலாதன் சொல்கிறார், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஒப்பற்ற புனித நாமத்தை, புகழை, லீலைகளை கேட்பதும் (ஸ்ரவணம்), ஜபிப்பதும் (கீர்தனம்), அவரையே நினைத்துக்கொண்டிருப்பதும் (ஸ்மரணம்), அவர் திருவடிகளுக்கு தொண்டு செய்வதும் (பாத சேவனம்), அவரை பதினாறு விதங்களில் தொழுவதும் (அர்ச்சனம்), அவரை எண்ணி பிரார்த்தனை செய்வதும் (வந்தனம்), அவருக்கு சேவகனாக (தாஸ்யம்) இருப்பதும், அவருக்கு உற்ற நண்பனாக (சக்யம்) இருப்பதும் மற்றும் தன் உடல்,மனம்,சொல் யாவையும் அவரிடத்தில் சரணடைத்தலுமான (ஆத்ம நிவேதனம்) இந்த ஒன்பது செயல்களும் தூய பக்தி தொண்டுகளாக ஏற்றுகொள்ளப்படுகின்றன. எவனொருவன் இந்த ஒன்பது பக்தி தொண்டுகளின் மூலம் தன் வாழ்வை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்காக அர்பணிக்கின்றானோ, அவனே அணைத்தயும் கற்று தேர்ந்த ஞானியாவான்.

இந்த ஒன்பது பக்தி தொண்டுகளில் எதாவது ஒன்றை சரிவர செய்து வந்தாலே நாம் மோக்ஷ்சம் அடையலாம். இதற்கு உதாரணமானவர்களை பார்ப்போம். பரீக்ஷ்சித் மஹாராஜா ஏழே நாட்களில் மத் பாகவதத்தை கேட்டு(ஸ்ரவணம்)மோக்ஷ்சம் அடைந்தார். சுகதேவ கோஸ்வாமி ஸ்ரீமத் பாகவதத்தை அனைவருக்கும் எடுத்துச்சொல்லியே(கீர்தனம்) மோக்ஷ்சம் அடைந்தார். பக்த பிரஹலாதன் பகவானை நினைத்துக்கொண்டே(ஸ்மரணம்) மோக்ஷ்சம் அடைந்தார். மஹாலக்ஷ்மி மாதாவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் நித்தியமாக பகவான் திருவடிகளுக்கு தொண்டு(பாத சேவனம்) புரிந்து கொண்டேஇருக்கின்றனர். ப்ருது மஹாராஜா கிருஷ்ண‌ வழிபாட்டின்(அர்ச்சனம்) மூலம் மோக்ஷ்சம் அடைந்தார். அக்ரூரர் பகவானை பிரார்தனை(வந்தனம்) செய்து மோக்ஷ்சம் அடைந்தார். ஹனுமான் இராமபிரானுக்கு சேவகனாக(தாஸ்யம்) இருந்தே மோக்ஷ்சம் அடைந்தார். அர்ஜுனன் பகவான் கிருஷ்ணருக்கு நண்பனாக(சக்யம்) இருந்து மோக்ஷ்சம் அடைந்தார். பலி மஹாராஜா திரிவிக்ரமனான வாமனனுக்கு தன்னையே அர்பணித்து(ஆத்ம நிவேதனம்) மோக்ஷ்சம் அடைந்தார். பக்தி யோகம் எவ்வளவு சுலபம் என்று இப்போது புரிந்துகொண்டீர்களா!.

மேலும் யோகமுறை யுகதர்மங்களுக்கு ஏற்றவாறு பின்பற்றப்படுகிறது. சதுர்யுகங் களான சத்ய அல்லது க்ருத யுக மக்களுக்கு தியானத்தின் மூலம் பகவானை அடையும் முறையும், த்ரேதா யுக மக்களுக்கு யாகம் அல்லது யக்யம் புரிவதன் மூலம் பகவானை அடையும் முறையும், த்வாபர‌ யுக மக்களுக்கு அர்ச்சனம்(வழிபாடு) செய்வதன் மூலம் பகவானை அடையும் முறையும் மற்றும் கலியுக மக்களுக்கு நாமசங்கீர்த்தனத்தின் மூலம் பகவானை அடையும் முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை ப்ருஹன் நாரதிய புராணம்(அத்_17.21) கீழுள்ள ஸ்லோகத்தின் மூலம் எடுத்துரைக்கிறது.

ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்

கலெள நாஷ்தி ஏவ நாஷ்தி ஏவ நாஷ்தி ஏவ கதிர் அன்யதா.


பொருள்:

சண்டை சச்சரவு மிக்க இந்த கலியுகத்திலிருந்து நம்மை, ஹரிநாமசங்கீர்த்தனத்தை தவிர வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது, வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது, வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது.

இதை வலியுறுத்தவே சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் மேற்குவங்காளத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் , ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். அவரின் இந்த அவதாரம் கலியுகத்தில் வாழும் அணைத்து கைவிடப்பட்ட‌ மக்களையும் விடுவிக்கும் அவதாரமாக அமைந்திருந்தது. இவரும், இவருடைய தலைமை சீடர்களான நித்யானந்த பிரபு (ஆதிசேஷன் அம்சம்), அத்வைத பிரபு (மஹா விஷ்ணுவின் அம்சம்), கதாதர பிரபு (ஸ்ரீமதி ராதாராணியின் அம்சம்) மற்றும் ஸ்ரீவாசா பிரபும் (தேவரிஷி நாரதர் அம்சம் ) சேர்ந்து பஞ்ச தத்வா என்று போற்றப்படுகின்றனர். இந்த ஐவரும் இணைந்து மேற்குவங்கம் மற்றும் பூரியின் ஒவ்வொரு தெருக்களிலும்

ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! கிருஷ்ணா கிருஷ்ணா! ஹரே ஹரே!

ஹரே ராமா! ஹரே ராமா! ராமா ராமா! ஹரே ஹரே!


என்று இந்த‌ ஹரிநாம மந்திரத்தை ஒலிக்கச்செய்தனர். இன்று இம்மந்திரம், அகில உலக கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் (இஸ்கான்) மூலம் உலகெங்கிலும் ஒலிக்கிறது.

நாமசங்கீர்தனம் ஒன்றை மட்டுமே செய்யத்தொடங்கினால் போதும், மற்ற பத்திதொண்டுகளில் உங்களை அறியாமலேயே நீங்கள் அந்த மஹாலக்ஷ்மியை கவர்ந்த லக்ஷ்மிகாந்தனால் கவரப்படுவீர்கள்.

இவ்வளவு எளிமையான இந்த பக்தி யோகத்திற்கு நான்கு எளிய விதிமுறைகள் உள்ளது. அவை


1. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது.

2. புலால் உண்ணுதல் (மாமிச உணவு) கூடாது.

3. எந்த வித சூதாட்டமும் கூடாது.

4. தகாத உடலுறவு கூடாது.

கிருஷ்ணா என்று உள்ளத்தில் எழும் காதலுடன் அவரை அழைக்கத்தொடங்குங்கள், கண் இமைக்கும் நேரத்தில் இந்த தீய பழக்கங்களிலிருந்து உங்களை விடுவிப்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.


ஆன்மீக‌குருவின் அவசியம்

யார் குரு? சதாசர்வ காலமும் யாரொருவர் பகவான் கிருஷ்ணரை பற்றி பாடி கொண்டும், பேசிக்கொண்டும், அவர் நினைவிலேயே இருக்கின்றாரோ அவரே குரு ஆவார். மேலும் இந்த குரு, இவரைபோன்று மற்றொரு குருவிற்கு சிஷ்யனாக இருக்கவேண்டும். மேலும் இவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களான பிரம்ம மத்வ கெளடிய சம்பிரதாயம், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம், ருத்ர சம்பிரதாயம், நிம்பர்க்க சம்பிரதாயம் இவற்றில் ஏதேனும் ஒரு சம்பிரதாயத்தின் குரு சிஷ்ய தொடர்சங்கிலியில் வருபவர்களாக இருக்கவேண்டும். விளக்கில்லாமல் இருளில் செல்வதும், குரு இல்லாமல் கடவுளை அடைய முயற்சிப்பதும் ஒன்றே. இதை உணர்தவேதான் இராமனாக அவதரித்த போது வசிஷ்டரையும், கிருஷ்ணராகவே தோன்றியபோது சாந்திபனி முனிவரையும், பகவான் குருவாக ஏற்றுக்கொண் டார்.

முடிவுரை


(ப.கீ_8.5)

அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரண் முக்த்வா கலேவரம்

யஹ் பிரயாதி ச மத் பாவம் யாதி நாஷ்தியத்ர சம்ஷயஹ‌


பொருள்:

எவனொருவன் இறக்கும் தருவாயில் என்னை மட்டுமே நினைத்துக்கொண்டு தன் உடலை துறக்கின்றானோ, அவன் உடனடியாக என்னை அடைகிறான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதை படித்துவிட்டு, மரணத்தின் போது மட்டும் ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்தால் போதும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சாதாரண தலைவலி வந்தாலே பகவான் மீது சிந்தனை செலுத்துவது கடினம், அப்படியிருக்க மரணம் என்பதென்ன சாதாரண வலியா?. பக்தியோகத்தில் மூழ்கியிருக்கும் யோகிகளால் மட்டுமே மரண காலத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது சிந்தனை செலுத்தமுடியும். வேறு எவராலும் முடியாது.

(ப.கீ_18.66)

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷ‌ரணம் வ்ரஜ

அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷ்சயிஸ்யாமி மா ஷுச்சஹ‌


பொருள்:


அணைத்து தர்மங்களையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடை. அணைத்து பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். கவலைபடாதே.

என்று பகவான் நமக்கு உறுதியளிக்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சரணடைவதே தர்மங்களிலெல்லாம் உயர்ந்த‌ தர்மமாகும். எனவே உயர் தர்மத்திற்காக மற்ற தர்மங்களை கைவிடுதல் தவறில்லை. இவ்வாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது மனதை செலுத்துவதே தியானமாகும். அவரை அடைய முயற்சிக்கும் வழிகளே யோகங்கள் எனப்படும். அனைவரும் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை படித்து மோக்ஷ்சம் அடைய எனது வாழ்த்துக்கள்.


--
Nagarajan.M
Assistant Manager-Manufacturing
Haldia Petro Chemicals
M:9733595105


Nagarajan. M

Asst.Manager-manufacturing(IOP)

Haldia petrochemicals ltd,

Phone: 9733595105

Email: manonaga@gmail.com

Address:

A26/2C, HREL township,

Pithambar chak(PO),

Haldia,

Wetbengal-721657

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக