வெள்ளி, 18 ஜூன், 2010

முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? 012

---------- Forwarded message ----------
From: mugesh ind <mugeshind@gmail.com>
Date: 2010/6/18
Subject: katturai potti - Murugesan
To: admin@sivastar.net


ஈகரை அன்பர்களுக்கு வணக்கம். நான் இந்த கட்டுரை போட்டியில் பங்குகொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே என்னால் எழுதப்பட்ட இந்த கட்டுரையை தங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். எனது கட்டுரைக்கான விமர்சனங்களை தங்களிடம் இருந்து ஆவலுடன் எதிபார்க்கிறேன்.

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி. தமிழ்நாடு.


முன்னுரை:

வான் புகழ் வள்ளுவர் பிறந்த நம் தமிழகம்தான் நாகரீகத்தில் உலகின் முன்னோடியாய் திகழ்ந்தது ஒரு காலத்தில். இன்றும்தான்... குடும்பம் என்றால் என்ன, அது எப்படி இருக்க வேண்டும் என்று உலகத்திற்கே கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். நமது இந்திய தேசம் மட்டுமே கூட்டுக் குடும்பத்திற்கு பெயர்பெற்றது. அப்படிப்பட்ட கூட்டுக்குடும்ப முறை இன்று நம் சந்ததியினர் ஏட்டில் மட்டுமே படிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இதற்கான காரணம் தான் என்ன என்பதை காணும்போதுதான் முதியோர் இல்லங்கள் பெருக காரணம் என்ன என்பதன் விடை கிடைக்கிறது.


முதியோர் என்பவர்கள் யார்?

முதியோர்கள் என்பவர்கள், இன்றைய இளையசமுதாயத்தினரே நாளைய முதியோர்களாக வருகிறார்கள். ஒரு தந்தையால் தூக்கி வளர்க்கப்பட்ட மகன் தனது தந்தையின் செயல்களை கூர்ந்து நோக்குகிறான். அந்த தந்தையின் செயல் வடிவிலேயே அந்த மகனும் வளர்கிறான். தனது தந்தை செய்யும் செயல்களை நன்றாக கவனிக்கின்றான். நாம் நமது தாய் தந்தையை கவனிக்காது விட்டால் நம் பிள்ளைகள் கண்டிப்பாக நம்மை வயது முதிர்ந்த காலத்தில் கவனிக்க மாட்டார்கள் என்பதே உண்மை.


காலமாற்றம்:

இன்றில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பம் வளராத காலம். அந்த காலத்தைவிட தற்போது முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படும் முதியோர்களின் விழுக்காடு மிகவும் அதிகரித்துள்ளது. காரணம் தொலைகாட்சி பெட்டிகளில் வரும் மக்களை சீர்குலைக்கும் நாடகங்களே என்றால் அது மிகை அல்ல. குடும்பப் பெண்களையே குறி வைத்து எடுக்கப்படும் தமிழ் நாடகங்கள் ஒரு நல்ல குடும்பத்தயே சீரழித்து விடுகிறது. முன்பெல்லாம் நாம் தொலை பேசியில் பேசும்போது வீட்டில் குழந்தைகள் யாரவது போனை எடுப்பார்கள். போன் பேசுபவர் "தம்பி நான் மாமா பேசுகிறேன் நல்ல இருக்கிறாயா? அப்பா இருக்காங்களா?" என்றெல்லாம் பேசுவார்கள். அதே போன்று குடும்பத்தில் உள்ள அனைவர்களிடமும் பேசிவிட்டுத்தான் போனை வைப்பார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்களின் சொந்தம் பந்தம் வளர்கிறது. கோடை விடுமுறைகளில் பிள்ளைகளை சொந்த ஊருக்கும், சொந்தக்காரர்கள் வீட்டிற்கும் அனுப்பி வைப்பார்கள். விடுமுறை முடிந்து திரும்பும்போது கண்ணீருடன் விடைபெறுவார்கள். ஆனால் இந்த காலத்தில் விருந்தினர் வந்தால் எத்தனை நாள் தங்குவீர்கள்? எப்போது போவீர்கள்? என்ற வினாக்களே வருகின்றன. மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை செய்யவேண்டும். ஏனெனில் விருந்தோம்பல் என்பது தமிழனின் இரத்தத்தில் கலந்த ஒன்று. அப்படிப்பட்ட தமிழர்கள் முதியோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் எண்ணம் வரலாமா? கூடவே கூடாது...


விலைவாசி:

மட்டற்ற விலைவாசி ஏற்றம் இன்றைய மக்களை மிகவும் வாட்டி வதைக்கிறது. முதியோர் இல்லங்களுக்கு பெற்றவர்கள் அனுப்பப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். பசி என்ற ஒன்றும் தனக்கென ஒரு துணையும் (மனைவி அல்லது கணவன் அதாவது வயிற்றுப் பசி மற்றொன்று உடல் பசி ) இருப்பதனால்தான் உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு போராடுகிறான். இவைகள் இரண்டும் இல்லையென்றால் உலகம் பாறையாக மாறிவிடும். அப்படிப்பட்ட சூழலில் வாழும் மனிதனின் வருமானம் போதுமானதாக இல்லாவிட்டால் அந்த குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பமாகிவிடும். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முதியோர்களே! ஆனால் முதியோர்கள் தங்கள் கையில் பணமோ அல்லது சொத்துக்களோ இருப்பின் அவர்களின் நிலைமையே வேறு! அரசாங்கம் விலைவாசியை குறைத்தாலே நடுத்தர மக்கள் வாழ்க்கையில் ஒழி வீசும்.


வியாபாரம்:

இந்த நவீன காலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக எப்படிஎல்லமோ சிந்திக்கிறார்கள். அரசு உத்தரவுடன் ஆரம்பிக்கப்படும் முதியோர் இல்லங்கள் ஒருபக்கம் வெளிநாட்டு பணத்தைக்கொண்டு ஆரம்பிக்கப்படும் இல்லங்கள், சுய லாபத்திற்காக ஆரம்பிக்கப்படும் இல்லங்கள் என எத்தனயோ வழிகளில் ஆரம்பிக்கப்படுகின்றன. தாய் தகப்பனை கடைசி காலத்தில் கவனிக்காமல் இருப்பது சட்ட விரோதம் என்று அரசு அறிவித்தும், தான் கொடுமைப்படுத்தப் படுகிறோம் என்று எந்த பெற்றோரும் தான் பிள்ளைகள் மீது புகார் செய்வதில்லை. ஏனென்றால் பெற்ற பாசம். ஆனால் அது பிள்ளைகளுக்கு இல்லையே! கேட்டால் அது குடும்ப சூழ்நிலை நான் என்ன செய்வது என்கிறார்கள். இருக்கிற விலைவாசியில் நங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகைகூட செலுத்துவதற்கு சிரமப்படுகிறோம். எங்களுக்கே எங்கள் வீடு போதுமானதாக இல்லை. என்ன செய்வது! அதனால்தான் அப்பாவை சுதந்திரமாக இருக்கட்டும் என்று முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டேன் என்று சொல்லும் எத்தனை பேர்களை பார்க்கிறோம். வியாபார நோக்கத்தில் ஆரம்பிக்கப்படும் முதியோர் இல்லங்கள் கவர்சிகரமாக விளம்பரம் செய்கிறார்கள். சிறிய குழப்பத்தில் இருப்பவர்கள் கூட உடனே அதுதான் சரி என்று பெற்றவர்களை உடனடியாக முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள்.


விழிப்புணர்ச்சி:

சமுதாயத்தில் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை அரசே முன்னின்று செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தனது இளமை பருவத்தில் பட்ட அவதிகளை (நல்லவற்றுக்கானது மட்டும் ) தனது பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். பணத்தின் அருமை, அவதி என்றால் என்ன? உறவினர்கள் யார்? மற்றவர்களுக்கு நாம் எப்படி மரியாதையை செலுத்தவேண்டும்? நட்பு, அன்பு,பாசம் போன்றவற்றை குழந்தை பருவத்தில் இருந்தே நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். பிற்காலத்தில் அவர்களை நாம் குறை கூறி என்ன பயன்? தென்னை மரத்தை நட்டால் இளநீர்தான் கிடைக்கும். ஆகவே நமது குழந்தைகளை தென்னம் பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். தமிழில் ரோஜாவனம் என்றொரு திரைப்படம். மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட ஒரு படம். இது போன்ற சமூக சிந்தனையுடன் கூடிய பொழுதுபோக்கு படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அரசு இதுபோன்ற குறும் படங்களை எடுத்து வெளியிடவேண்டும். பொது மக்களின் உணர்வுகளை தூண்ட வேண்டும். அப்படியாவது வருங்கால சந்ததியினருக்கு பந்த பாசத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்:

விலைவாசி ஏற்றமும், அரசியல்வாதிகளின் சுயநலங்களும் சாதாரண மக்களை மிகவும் தினரச்செய்கின்றன. ஆகவே ஒரு நபரின் வருமானம் பற்றாக்குறையாகி குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழ்நிலையில் தங்கள் பெற்ற பிஞ்சி குழந்தைகளை கான்வென்ட், அங்கன்வாடிகளில் விட்டுவிட்டு வேலைக்கு ஓடுகிறார்கள். பாவம் அந்த குழந்தைகள்.

நமது ஊர்களில் "குளுவார்கள்" என்ற நாடோடி கூட்டத்தை பார்க்கலாம். அவர்களை நரிகுறவர்கள் என்றும் அழைப்பதுண்டு. நாகரீகத்தை சிறிதும் அறியாதவர்கள். கல்விக்கூடங்களே அவர்கள் செல்வதில்லை. ஆனால் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை இன்றும் மிக மிக மகிழ்ச்சியுடன் கழிப்பவர்கள் அவர்களேயன்றி வேறு யாரும் இல்லை என்பதே உண்மை. அவர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் உடம்பிலேயே தொட்டில் கட்டி நடந்து செல்வார்கள். அதுபோன்று நாகரீகம் தெரிந்த நாம் இல்லாவிட்டாலும் நாம் குழந்தைகளுக்கு பாசத்தை ஊட்டுங்கள். பிற்காலத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் சந்தோசமாக பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே உங்கள் குழந்தைகளுடன் போதுமான அளவு நேரத்தை செலவிடுங்கள்.

முடிவுரை:

இந்த உலகம் தோன்றி எத்தனயோ கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் எத்தனையோ கோடி ஆண்டுகள் இந்த உலகம் இருக்கலாம். இருந்தபோதிலும் மனிதனின் வாழ்க்கை என்னவோ சுமார் எழுபது ஆண்டுகள்தான். இதில் 35 ஆண்டுகள் தூங்கி கழிக்கிறோம். பதினைந்து ஆண்டுகள் விபரம் அறியாதவர்களாக இருக்கிறோம். மீதம் இருப்பது இருபது ஆண்டுகள். இதில் அறுபது வயது முதல் எழுபது வயது வாழ்க்கை ஏதோவாழ்கிறோம் என்ற நிலைதான். உண்மையான வாழ்க்கை பத்தே பத்து ஆண்டுகள்தான். இந்த பத்து ஆண்டுகளை நன்றாக வாழ்வோம் என்று ஒவ்வொருவரும் சபதம் எடுக்க வேண்டும். சங்ககால தமிழ்க் குடும்பங்களைப்போல வாழ்ந்திட ஆசைப்படுவோம். முதியோர்கள் நம்மை பெற்றவர்கள். நமக்கு வழிகாட்டிகள். அவர்கள் நடப்பில் குழந்தைக்கு சமமானவர்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று நாம் முன்னோர்கள் சொல்லிச் சென்றதை நாம் மறந்து விடல் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக