வியாழன், 15 ஜூலை, 2010

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா? 019

---------- Forwarded message ----------
From: Nila saki <nilasaki@in.com>
Date: 15 July 2010 18:41
Subject: eegarai kadduraipoddi
To: admin <admin@sivastar.net>

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

இந்தியாவின் தேசிய இளைஞர் கொள்கையின் படி பதிமூன்று வயது முதல் முப்பத்தியைந்து வயது உட்பட்டவர்களே இளைஞர்கள் என்று வரையறுக்கப் படுகின்றனர் .இதில் இருபாலர்களும் அடக்கம்.அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபத்தி ஆறு சதவிகிதம் இளைஞர்கள் தான். மக்கள் வளத்தில் சீனா இந்தியாவை விட முதன்மையாக இருந்தாலும் , அவர்களைவிட அதிக இளைஞர் சக்தியைக் கொண்டது இந்தியா .நேற்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களை ஒழுங்காக வழி நடத்திச் செல்கின்றனரா?புதிய கலாச்சாரத்தினாலும் ,தொழில்நுட்ப வளர்ச்சிகளினாலும் இன்றைய இளைஞர்கள் அபரிமிதமாக முன்னேறி உள்ளனரா ?அல்லது திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றனரா ? என்று காண்போம்

கல்விநிலை

பெற்றோர்கள் மற்றும் ஆசிரயர்களின் கவனிப்பில் இருக்கும் பருவம் பதிமூன்று வயது முதல் இருபது வயது வரை .இந்த பருவத்தில் அவன்/அவள் பார்க்கும் மற்றும் கற்கும் விஷயத்தைப் பொறுத்துதான் வெறும் களிமண்ணாக மாறப்போகிறார்களா ?அல்லது சிறந்த ஒரு பாத்திரமாக மாறப்போகிறார்களா? என்று நிர்ணயிக்கப்படுகிறது.அவர்களது திறமையைக் கண்டறிந்து ஊக்குவிப்பதும் ,சிறந்த வழிகாட்டுதலும் இன்றைய மன்னர்களின் கைகளில் தான் இருக்கிறது .அவர்களது அறிவுப்பசிக்கு தீனிபோட தகுதியுடையவர்களாய் இருக்கவேண்டும்.இன்றைய மாணாக்கர்களின் அறிவு அபரிமிதமானது ...நிச்சயம் அவர்களது அறிவுத்திறன் முந்தைய தலைமுறையை விட வளர்ந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் .கலை ,அறிவியல் என்று பல்வேறு துறையில் சராசரி அளவைவிட பிராகசிக்கின்றனர் .இதற்கு காரணம் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள், தொலைக்காட்சி,இணையதளம் என்று பல காரணங்கள் உண்டு.இதில் கிராமப்புறம் நகரப்புறம் என்ற சுவரு மெல்லிய தாகிக் கொண்டே போகிறது.

பண்பு

ஆனால் பண்பு .மனிதம் போன்ற விஷயங்களும் மலிவாகிக் கொண்டே போகின்றது .பெரியோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்த மரியாதை தேய்ந்து கொண்டே வருகிறது.சின்னத்திரை,பெரியத்திரை மற்றும் ஊடகங்கள் ஒருவகையில் அவர்களை வளர்த்தாலும் இன்னொரு வகையில் சீரழித்துக் கொண்டுதான் இருக்கின்றன.திரும்பும் பக்கமெல்லாம் பாலியல் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.பதினான்கு வயது மாணவன் மாணவியைக் கற்பழிக்கிறான்.இன்னொரு பக்கம் பாலியலறிவு இல்லாததால் சிறார்கள் பாலியல் வக்கிரங்களுக்கு பலியாகின்றனர் .இதில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன வென்றால். சினிமா,இணையதள வக்கிரங்கள் அனைத்தையும் உருவாக்குபவர்கள் நேற்றைய தரம் கேட்ட மன்னர்களே .பணம் புகழ் ஒன்றே பிராதானம் ஆகிவிட்டது ,நீதியும் நேர்மையும் மங்கிவிடத் தொடங்கிவிட்டது.மறுபுறம் அப்துல்கலாம் ,அண்ணாதுரை சாமி போன்றோர்களின் வழிகாட்டுதல் இன்றைய இளைஞர்களுக்கு இன்றி அமையாத சக்தி.

ஏட்டுக்கல்வி

இதற்கு தீர்வுதான் என்ன மாணவர்கள் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் கண்காணிக்கப்படவேண்டும்.வெறும் மதிப்பெண் எடுக்க கற்றுத் கூடாது .அவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுக்க வேண்டும்.இன்றைய இளைஞர்கள் உடனடி வெற்றிக்குத்தான் ஏங்குகிறார்கள்,தோல்வியை சந்திக்க திடமில்லை.தற்கொலைகள் ,காழ்ப்புணர்ச்சி ,ஏன் ?சக மாணவனைக் கொலை செய்யக்கூட துணிந்து விடுகின்றனர்.மீறினால் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி முடங்கிப்போய் விடுகின்றனர் .ஐ .ஐ. டி மாணவன் தற்கொலை செய்துகொள்கிறான் ஒரு சிறு தோல்வியை சந்திக்க முடியாமல்,கல்வி ஒருவனை விளைநிலமாக்க வேண்டும் ,பண்படுத்த வேண்டும் ,தரிசாக்கக் கூடாது.பாலியல் விழிப்புணர்வு சரியான அளவில் புகட்டப்படவேண்டும்.வாழ்வை எதிர்கொள்ள திடமான மன உறுதியைப் பெற்றுத் தந்திடவேண்டும் .உலக அரங்கில் விளையாட்டுத் துறையில் நம் பங்களிப்பு குறைவாகைருக்கிறது.இதற்கு காரணம் புத்தகப்புழுவாய் மாணவர்கள் இருப்பதே காரணம்.ஒலிம்பிக் முதலிய சர்வதேச போட்டிகளில் நம் இளைஞர்களின் தரம் உயரவேண்டும்

வேலை

இருபது வயதுக்குமேல் குடும்பப்பொறுப்பை ஏற்கத் தயாராகிறான் இளைஞன் . நேற்றைய மன்னர்கள் ஓய்வு பெரும் வயதில் வாங்கிய சம்பளத்தில் இன்றைய இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் மிக எளிதாக வாங்கிவிடுகின்றனர் .அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் இந்திய இளைஞர்களின் கொடிதான் பறக்கிறது .இது ஒரு வகையில் தலைநிமிர்த்த கூடிய விஷயம் என்றாலும் கல்பனா சாவ்லா போன்றவர்கள் தாய்நாட்டில் கிடைக்காத ஊக்குவிப்பை அங்கு கண்டதால் தான் வேறு நாட்டுக்காக உழைக்கின்றனர் என்ற எதார்த்தத்தை உணர் வேண்டும் .கல்விமுதலான உதவிகளை தாய் நாட்டில் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்காக உழைக்கின்றனர்.உலகமே கிராமமாக ஆன பிறகு இது தவிர்க்க முடியாது .அதனால் அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யலாம்.இதனால் இந்திய விவசாயம் உள்ளிட்ட தொழில் வளர்ச்சி மேம்படும் ,பொருளாதாரம் உயரும் .

வாய்ப்புகள்

இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் ,இதற்காக அரசு ( நேரு யுவ கேந்தரா ) பல முயற்சிகளை எடுத்து வருகிறது.சுய தொழிலில் இளைஞர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி . இந்த தருணத்தில் இளைஞிகளின் நிலைமையையும் பார்க்க வேண்டும்

பள்ளி கல்லூரிவரை முதலிடத்தில் இருக்கும் மாணவியர் ,சமுதாய கோட்பாடுகளினால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர்.பல்வேறு துறைகளில் இன்று பெண்கள் அதிகமாக பங்கெடுத்தாலும் ,ஆண்களை ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது தலைமைப் பதவிகளில் இவர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் காண முடியும் .ஏன் திறமையில்லையா? இல்லை ஆண் பெண் என்ற கண்ணாடித்திரை தடுக்கிறது.ஆண்கள் பெண்களையும் மேலே வர விட வேண்டும்.ஏனென்றால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.தலைமைப் பொறுப்புகளில் ஆண்களுக்கு நிகராக சுடர் விடுகின்றனர்.

அதீத பணப்புழக்கத்தால் பாலியல் கொடுமைகளும் சீர்கேடுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .பன்னாட்டு நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் இளைஞர்கள் அறம் தவறுகின்றனர்.இரவு நேரங்களில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இன்னும் பாதுகாப்பில்லை.சுதந்திரம் கிடைத்து என்ன பயன்?.முதியோரில்லத்தில் பெற்றோர்கள்,தன பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்க மட்டும் பிள்ளைகளால் வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லப்படும் பாட்டிமார்கள்.(வெளிநாட்டில் ஆயா வேலைக்கு அதிக பணம் கேட்கிறார்களாம் ).இவ்வளவு பணம் சம்பாதித்து என்ன பயன் ? நன்றி மறந்தோருக்கு,பாசம் கொல்வோர்க்கு. வாழக்கை வேகத்தில் மனிதத்தை மறக்காதீர்கள்.

நாளைய மன்னர்களே!

மேதகு இளைஞர்களே! இந்த நாடே உங்கள் கையில் தான்!.ஆரோக்யமான போட்டி நமக்குள் மட்டுமல்ல,ஆண்டிப்பட்டியில் பிறந்தவனுக்கும் அட்லாண்டாவில் பிறந்தவனுக்கும் இருக்க வேண்டும் ,உங்களது திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் .சிந்தனைகளும் கனவுகளும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும் .ஆரியபட்டா ,சாணக்கியர் ,விவேகானந்தர் ,அப்துல் கலாம் ,சி.வி ராமன் பிறந்த நாடு நம் நாடு.தொன்மை நிறைந்த யோகாவும் ,மருத்துவங்களும், நீதி நெறி தந்த திருக்குறள் முதலிய நூல்களை உருவாக்கிய செல்வ நாடு.இயற்கைவளங்கள் கொழிக்கும் கவின் நாடு நம் நாடு.பாரதி சொன்னது போல் "பலநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைக் கற்போம்".வழிகாட்ட எத்தனையோ விளக்குள் சுடர்விட்டுக் காத்துக் கொண்டு இருக்கின்றன.அதைக்கொண்டு கல்லாமை,இல்லாமை, ஊழல் போன்ற இருளினைக் கொளுத்துவோம்.உலக அரங்கில் அனைத்து துறைகளிலும் நீங்களே மன்னர்கள் !தோள்கொடுப்போம் !கலாச்சாரம் காப்போம் ,மனிதம் வளர்ப்போம் தொன்மையினை சிதைக்காமல் இருப்போம்."ஒற்றுமையே வலிமை !" மறவோம். இன்றைய இளைஞர்கள் எழுந்து விட்டார்கள் !விழித்து விட்டார்கள் !

நன்றி
ம மங்கையர்க்கரசி /நிலாசகி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக